கல்வி

இந்தியாவின் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சியில் வேலூரின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கு ஓர் அரசுப் பல்கலைக்கழகம், ஒரு தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஓர் அரசு மருத்துவக்கல்லூரி, ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி தவிரப் பல பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை இரத்தவியல் மற்றும் உயிர் வேதியியல் தொழில் நுட்ப ஆராய்ச்சியில் உலகத்தரம் பெற்றிருந்த காரணத்தால் மத்திய அரசாங்கத்தின் உயிரியல் தொழில்நுட்பத் துறை இம்மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்து நாட்டின் முதல் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையத்தை திசம்பர் 2005 ஆம் ஆண்டு வேலூரில் நிறுவியது. இதன் தொடர்ச்சியாக இக்கல்லூரி முதிர்ந்த எலியிடமிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களை மறு செயலாக்கத் திட்டத்தின்மூலமாக மனித கருவில் காணப்படும் ஸ்டெம் செல்கள் போன்று செயல்பட வைத்து நாட்டின் மருத்துவ மற்றும் அறிவியல் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டின் வடகிழக்கு மண்டலமான வேலூருக்கு அருகில் உள்ள விரிஞ்சிபுரத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்த 32 ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாகும். வேலூரின் மானாவாரிப் பகுதிகளில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தேசிய நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் (NWDPRA) அக்டோபர் 1997 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 18 நீர்நிலைகளில் நீர் மற்றும் மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதனைகள் நடத்துவது ஆகும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்திருந்தது. வேலூரில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் முதலியன திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்திருக்கின்றன. தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி மட்டுமே அரசு நடத்தும் பொறியியல் கல்லூரியாக உள்ளது. இந்தியாவின் சிறந்த தனியார் பொறியியல் பல்கலைக்கழகமாக வேலூர் தொழிற் நுட்பப் பல்கலைக்கழகம் (VIT) விளங்குகிறது என்று இந்தியா டுடே வார இதழ் மதிப்பீடு செய்துள்ளது.

கிருத்துவ மருத்துவ கல்லூரியும் மருத்துவமனையும்:-

இந்தியா மற்றும் ஆசியாவிலுள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று கிருத்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகும். வேலூர் நகரின் இதய பகுதியில் உள்ள இம்மருத்துவமனை நகரைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சுகாதாரம் வழங்கும் நிறுவனமாக விளங்குகிறது.

1954 இல் நிறுவப்பட்ட ஆக்சிலியம் மகளிர் கல்லூரி வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைக்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரி ஆகும். இது தவிர நகரத்தில் சாயிநாதபுரம் அருகே தனபாக்கியம் கிருஷ்ணசுவாமி முதலியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓட்டேரி அருகே முத்துரங்கம் அரசு கலை கல்லூரி, புகழ் பெற்ற சி.எம்.சி கண் மருத்துவமனைக்கு அருகில் ஊரிசுக் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. 1898 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பழமை வாய்ந்த ஊரிசுக் கல்லூரியில் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு எஸ். இராதாகிருட்டிணன் அவர்கள் கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அரசு ஒரு நினைவு அஞ்சல்தலையை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.

அரசினர் சட்டக்கல்லூரி 2008 ஆம் ஆண்டு வேலூரில் நிறுவப்பட்டது. காட்பாடியில் அமைந்துள்ள இக்கல்லூரியில் ஆண்டுக்கு 80 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மூன்றாண்டு சட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது. இவை தவிர இங்கு அதிகமான அரபிக் கல்லூரிகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.